காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் விவகாரம்.. வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம்..!

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் விவகாரம்.. வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம்..!

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும்,  காஞ்சிபுரம் மாவட்ட  நீதிமன்றம் செங்கல்பட்டில் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஓய்வு அறைகள் நீதிமன்ற அறைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட முடிவு செய்தும், இதுவரை அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படாததால், நிதி ஒதுக்க கோரி கடந்த ஆகஸ்டில் அளித்த தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான திருத்திய திட்டம் மற்றும் மதிப்பீடுகளை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க: மாணவர்களுக்கு மத்தியில் அரசியல் பேசும் ஆளுநர்...!விமர்சித்த அமைச்சர்!!

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான நிதியை விரைவில் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.