கம்பத்தில் காந்தி சிலை சேதம்... பொதுமக்கள் போராட்டம்!

தேனி மாவட்டம் கம்பம் நகரில் காந்தி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் காந்தி சிலையின் முன்பு அவ்வப்போது பல்வேறு விழாக்களை நடத்தி வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை  அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் காந்தி சிலையின் வலது கை உடைக்கப்பட்டு சிலையில் ஒரு கை இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு  அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த  ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிலையில் இருந்த கையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியது தெரிய வந்து காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சிலையின் முன்பு அமர்ந்து காந்தியின் சிலையை அவமதித்த குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காந்தி சிலை உடைக்கப்பட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கம்பம் நகர் பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.