"இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நாட்டிற்கு வர வேண்டும்" பப்புவா நியூ கினியா ஆளுநர் பேச்சு!

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வர வேண்டுமென அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் வலியுறுத்தியுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.எஸ்.ஜி கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டனின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல், மற்றும் அந்நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல், "பப்புவா நியூ கினியா நாட்டில் பல கல்லூரிகள் உள்ளது. ஆனால் அங்கு அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்படும் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் உள்ளது போல் அங்கு இல்லை. இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை அங்கு அழைத்து கொண்டிருக்கிறோம். அந்த நாட்டில் தொடங்க நிறைய வாய்ப்பு உள்ளது. இங்கு உள்ளவர்களுக்கு வியாபாரமாகவும் இருக்கும். எங்கள் நாடு ஆஸ்திரியாவில் இருந்து விடுதலை பெற்ற நாடு" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர்கள், "இந்தியாவுக்கும் பப்புவா நாட்டிற்கும் 80லிருந்தே உறவுகள் உள்ளது. அங்கு கனிம வளம், விவசாயம் சம்மந்தபட்டதும் அதிகம் உள்ளது. சாட்டிலைட் தொடர்பாக இந்தியாவிலிருந்து பப்புவா நாட்டிற்கு வரும் 25 ஆம் தேதி இஸ்ரோ குழுவினர்கள் வருகிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளனர்.