கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி கருக்கா வினோத் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. பின்னர் வழக்கின் ஆவணங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அதன்படி, ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  

இதையும் படிக்க : வெள்ளம் வடிந்த நிலையில், முழுவீச்சில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்!

ஆளுநர் மாளிகைக்கு எதிரில் உள்ள சாலை, குண்டு வீசப்பட்ட பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படையைச் சேர்ந்த சில்வாணு என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அவரை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.