கொத்து கொத்தாய் செத்து கிடந்த மயில்கள்!

பல்லடம் அருகே கொத்து கொத்தாய் மயில்கள் செத்துக்கிடக்கும் நிலையில் இவற்றிற்கு விஷம் வைத்து கொன்றது யார்?  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம்,  காமநாயக்கன்பாளயத்தை அடுத்த கோவை திருப்பூர் எல்லையில் உள்ள காந்திநகர் பகுதியில் சண்முகராஜ், ராமசாமி மற்றும் கோபால்சாமி ஆகியோருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கொத்து கொத்தாக 22 மயிகள் செத்துகிடந்தன. இதனை கண்ட ஆடு மேய்க்கும் பெண்மனி தோட்டத்து உரிமையாளரிடம் சென்று தகவல் அளித்துள்ளார். 

தகவலை அடுத்து விரைந்து வந்த தோட்டத்து உரிமையாளர்கள் மயில்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கிராம நிர்வாகத்திற்கும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொத்துக்கொத்தாக மயில்கள் செத்துக்கிடந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விதைகளில் யாரேனும் விசம் வைத்திருக்கலாம் எனவும் அதனை தின்ற மயில்கள் செத்திருக்கிலாம் என தெரிகிறது. மேலும் மயில்களின் வாயில் இருந்து நுரை தள்ளியிருப்பது அதனை உறுதி நெய்யும் விதமாக உள்ளது. இதனிடையே மயில்கள் நேற்று மாலையே இறந்து கிடந்ததாகவும் அதனை மறைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் காலை அவ்வழியாக சென்ற பள்ளி மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சமூக ஆர்வலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதன் பிறகுதான் 22 மயில்கள் இறந்து கிடந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனப்பறவையானமயில் இறந்தால் உடனடியாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. இதனிடையே விஷம் வைத்து கொல்லப்பட்ட மயில்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் உண்மை தெரிய வரும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: பங்காரு அடிகளார் மறைவு; அண்ணாமலை பாதயாத்திரை ரத்து!