மாநிலக்கல்லூரியில் வி.பி.சிங் சிலை...யார் இந்த வி.பி.சிங் ??!!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் உருவச்சிலையை, சென்னை மாநிலக்கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் பிறந்து பிரதமரான ஒருவருக்கு, தமிழ்நாட்டில் சிலை வைப்பது ஏன்? யார் இந்த வி.பி.சிங்? பார்க்கலாம்...

சமூகநீதி மண் என தமிழ்நாட்டை சமீபத்தில் அரசியல் தலைவர்கள் போற்றிவரும் நிலையில், இந்தியாவின் சமூகநீதிக் காவலராக அறியப்பட்டவர் பிரதமர் வி.பி.சிங். வெறும் 11 மாதங்களுக்கு மட்டுமே பிரதமராக பதவி வகித்தபோதும், பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு சட்டம், மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேற்றம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையம் அமைத்தது என மக்களாட்சி வரலாற்றில் மறக்கமுடியாத பிரதமராக வி.பி.சிங் அறியப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ, எம்பியாக பதவி வகித்து வந்த வி.பி.சிங்கின் பணியைக் கண்டு வியந்த இந்திரா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக 1980ம் ஆண்டு நியமித்தார். வழிப்பறிக் கொள்ளைகளை தடுக்க முடியாமல் தவித்த அவர், தனது பணியை சரிவர செய்யாததால், பதவி விலகுவாக அறிவித்தார். 1984ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக செயல்பட்டபோது, அமலாக்கத்துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கி, வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து நடந்த சோதனையில், சில நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நிதி வழங்கும் நிறுவனங்களாக இருந்த நிலையில், ராஜீவ் காந்திக்கு நெருக்கடி ஏற்படவே, நிதித்துறையில் இருந்து பாதுகாப்புத்துறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அப்போதும் தனது வேட்டையை நிறுத்தாத வி.பி.சிங், ஸ்வீடன் ரேடியோவில் வெளியே கசிந்த போபர்ஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். ராஜீவ்காந்தின் தோல்விக்கு முக்கியப்பங்கு வகித்த இந்த சம்பவத்தை அடுத்து, வி.பி.சிங் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, ஜனமோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கி, திமுக, தெலுங்கு தேசம், ஜனதா கட்சி, மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, தேசிய முன்னணி கூட்டணியை உருவாக்கவே, 1989ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் 7-வது பிரமராக பொறுப்பேற்றார்.

இதையும் படிக்க : வி.பி.சிங்கின் உருவச்சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்...!

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றம், ராஜீவ்காந்தியால் அமைதிப்படை என இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் மேல் குற்றச்சாட்டுகள் எழவே, அப்படையினரை நாடு திரும்ப வைத்தது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சட்ட அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வானைக் கொண்டு நிறைவேற்ற முன்னெடுப்பு செய்தது என, அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சென்னையின் உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டியது அவரே.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என நாடு முழுவதும் எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒருவன் சமூக அடிப்படையில்தான் பல்லாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு இருக்கிறான். அதனால், சமூக அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். அதன்படி, மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றினார். 

இதில் கொடுமையாக, யாருடைய உரிமைக்காக வி.பி.சிங் போராடினாரோ, அதே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வைத்தே போராட்டம் நடைபெற்ற நிலையில், தவறான தூண்டுதலில் உயிர் இழப்பும் ஏற்பட்டது. அதே நேரத்தில், மதக் கலவரத்தைத் தூண்டும் என்ற நோக்கில், தனது ஆட்சிக்கு ஆதரவளித்த போதும் அத்வானியை கைது செய்யுமாறு அப்போதைய பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத்திடம் வி.பி.சிங் கூறினார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அத்வானி மீதான இந்த கைது நடவடிக்கையால் வி.பி.சிங் ஆட்சி மீதான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. 

பின்னர், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வெறும் பதினோறே மாதங்களில் வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்டது. சமூகநீதிக்காக போராடிய தலைவர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். 

இறுதியாக, அவரது பதவி பறிபோகும்போது, உங்களுடைய கடைசி நாளான இந்த தினத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டபோது, அரசியல் நாட்காட்டியில் கடைசிநாள் என்பதே இல்லை எனக் கூறினார்..

இன்று ஒடுக்கப்படுகிற பிற்படுத்தப்படுகிற மக்களின் பெயருக்கு பின்னால், கல்வி பட்டங்கள் இருக்கிறது என்றால், அதற்கு வி.பி.சிங்கின் பணிகள் முக்கிய காரணம். இப்போது வரப் போகிற சிலையும் சரி, அந்த பெயருக்கு பின்னால் இருக்கும் கல்விப் பட்டங்களும் சரி, அவர் கூறியது போலவே, அரசியல் நாள்காட்டியில் கடைசி நாள் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது...