"விளையாட்டு துறைக்கென தனி கொள்கை" உதயநிதி ஸ்டாலின்!

"விளையாட்டு துறைக்கென தனி கொள்கை" உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கென தனி கொள்கை விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சர்வதேச விளையாட்டு அறிவியல் குறித்த  இரு நாள் கருத்தரங்கை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கடந்த நூற்றாண்டில்  அறிவியலின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு அறிவியலும் தொழில்நுட்ப கருவிகளும் அத்தியாவசியமானது. ஒலிம்பியாட், ஹாக்கி என பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடத்தபட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், விரைவில் தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கென தனி கொள்கை கொண்டு வரப்பட உள்ளது என்றும் வெறும் ஆலோசனை மட்டும் நடத்தும் கூட்டமாக இந்த கருத்தரங்கு இருக்காது என்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் மாநிலமாக மட்டும் அல்லாமல் சர்வதேச அரங்கில் வெற்றி பெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக மாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் எனக் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் கருத்தரங்கு இன்று தொடங்கி நாளை வரை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் மருத்துவர்கள், விளையாட்டுத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு துறையில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசப்படும். மேலும், தமிழ்நாட்டில் இது மாதிரி கருத்தரங்கு நடத்தப்படுவது முதல் முறை. இதன் மூலம் ஏராளமான வீரர்கள் பயன்பெறுவார்கள்" என பேசினார்.