மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி: சோதனைக்கு தயார் நிலையில் ககன்யான்..!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறும் நிலையில்  இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் காலை 8 மணிக்கு தொடங்கியது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் நாளை  விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 

ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 

இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன் 3 கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அந்தவகையில் இஸ்ரோவின் முதல்கட்ட சோதனை நிகழ்வு ஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ  விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த ககன்யான் திட்டம் வெற்றியடைந்துவிட்டால், 2040ம் ஆண்டில் மனிதர்களை இஸ்ரோ நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ககன்யான் சோதனைக்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

இதையும் படிக்க    | செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை...!