1975 - 2023 உலக கோப்பை கிரிக்கெட் - கடந்து வந்த பாதை!

ரசிகர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், "உலக கோப்பை கிரிக்கெட்" போட்டியின் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றே சொல்லலாம். முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொடங்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில்
இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான்,  இங்கிலாந்து,  நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. 

இந்தப் போட்டி 60 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடராக விளையாடப்பட்டது. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் உலக் கோப்பையை கைப்பற்றியது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் 2-வது போட்டி 1979-ம் ஆண்டு அதே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதன் இறுதிப் பேட்டியில், 92 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 2-வது முறையாக கோப்பையை தக்க வைத்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

அதைத்தொடர்ந்து, 1983-ம் ஆண்டு நடைபெற்ற 3-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்டது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொண்டது. இதில், 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை, 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. கபில் தேவ் தலைமையில் சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, சித்து, உள்ளிட்ட வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் தொடர்ந்து 2 ஆண்டுகள் கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி வீழ்த்தியது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. 
 
பிறகு 1987-ம் ஆண்டு நடைபெற்ற 4-வது உலக கோப்பை போட்டியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் இங்கிலாந்து நாட்டில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த உலக கோப்பை போட்டி, முதல் முறையாக இந்திய துணைக்கண்டத்தில் நடத்தப்பட்டது. அத்துடன், அதுவரை 60 ஓவர்கள் கொண்ட போட்டி, 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதில் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது இங்கிலாந்து அணி.

1992-ம் ஆண்டு நடைபெற்ற 5-வது உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. அதுவரை வெள்ளை நிற உடையில் ஆடிவந்த வீரர்களுக்கு ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு வண்ண உடைகள் வழங்கப்பட்டது இந்த ஆண்டில்தான். சிவப்பு வண்ண பந்து, வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டன. மேலும், பகலிரவு ஆட்டங்கள் என பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இறுதிப் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில்  இங்கிலாந்து அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.

1996-ம் ஆண்டு நடைபெற்ற 6-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2-வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்றது. பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இலங்கை அணி கோப்பையை தனதாக்கியது. 

1999-ம் ஆண்டு நடைபெற்ற 7-வது உலக கோப்பை போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இது ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த 2-வது கோப்பையாகும். 

தொடர்ந்து, 2003-ம் ஆண்டு நடைபெற்ற 8-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்கா நாட்டில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. இது ஆஸ்திரேலியா அணிக்கு கிடைத்த 3-வது கோப்பையாகும். 

2007-ம் ஆண்டு 9-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணி நடத்தியது. இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது. ஆனால், 53 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இலங்கை அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் இலங்கை அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

2011-ம் ஆம் ஆண்டு நடைபெற்ற 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா மற்றும் பங்களாதேஷ்  நாடுகள் நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்த இப்போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. 

எம்.எஸ். தோனி தலைமையில், சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், விராட்கோலி, யுவராஜ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 91 ரன்கள் அடித்து, ஆட்டமிழக்காமல் இருந்த தோனி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார். உலகக் கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்கு சமர்பித்த வீரர்கள், சச்சினை தோளில் சுமந்தபடி, மைதானத்தை சுற்றி வந்த காட்சி யாராலும் மறக்க முடியாது. இதன் மூலம் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா...

2015-ம் ஆண்டு நடைபெற்ற 11-வது உலக கோப்பை போட்டியை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் நடத்தின. இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி கோப்பை வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. 

அதனைத்தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற 12-வது உலக கோப்பை போட்டியை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடத்தியது. இறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இரண்டு  அணிகளும் 241 ரன் எடுத்து ஆட்டம் சமனில் முடிவடைந்ததால், இரண்டு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. அதிலும், இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்து சமன் செய்ததால், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, பவுண்டரிகள் அடிப்படையில் கோப்பை வழங்கப்பட்டது 2019-ம் ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது. 

தொடர்ந்து தற்போது, 2023-ம் ஆண்டு நடைபெறும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. இதில், இந்திய அணி லீக் போட்டியில் 9 போட்டிகளிலும், வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. 

இந்தியா, நியூசிலாந்து மோதிய முதல் அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, 50 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதில் 177 ரன்களை குவித்த விராட் கோலி, 50-வது சதத்தை அடித்து, சச்சினின் சாதனையை முறியடித்தார். அத்துடன், ஒருநாள் போட்டித் தொடரில், 711 ரன்களை எடுத்து, அதிக ரன்களை குவித்த வீரர் என்ற 2-வது சாதனையையும் படைத்தார் கோலி.  

இப்போட்டியில், நியூசிலாந்து அணி 48 புள்ளி 5 ஓவர்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 327 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் ஷமி  23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மற்றொறு அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 49 புள்ளி 4 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 212 ரன்களை எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47 புள்ளி 2 ஓவர்களில், 7 விக்கெட்டுகள்  இழப்பிற்கு, 215 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்று நடைபெறும், இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.  

இந்நிலையில் 2011- முதல் 2019-ம் ஆண்டு வரை போட்டி நடத்தும் நாடுகளே வெற்றி பெற்றுவருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு போட்டியை நடத்தும் இந்தியா கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கோப்பையை நோக்கியே உள்ளது. இதனால், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் விழாக் கோலம் பூண்டுள்ளது என்றால் அது மிகையில்லை. 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார்...? என்ற ஆரவாரத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.