நீட் தேர்வு; தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட மாணவி !

கள்ளக்குறிச்சி அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி- கவிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பைரவி (வயது 18) என்ற பெண் பிள்ளை உள்ளது. பைரவி பெரிய சிறுவத்தூரில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தார். பைரவி கடந்த வருடம் 12ஆம் வகுப்பில் 485 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். 

அவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டதால் பைரவியின் பெற்றோர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் நீட் தேர்வு பயிற்சிக்காக சேர்த்துள்ளனர். தனக்கு சரியாக நீட் தேர்வு பயிற்சியில் படிக்க முடியவில்லை என தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பைரவி கூறியுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கக்கூடிய கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் பைரவியின் தாயார் கவிதா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பைரவியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?