விடுமுறைக்காக புதிதாக 40 பேருந்துகள் இயக்கமாம்!

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது

விடுமுறைக்காக புதிதாக 40 பேருந்துகள் இயக்கமாம்!

தொழில் நகரமான கோவையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து  வரும் நிலையில் அவர்கள் பண்டிகை மற்றும் விழா காலங்களில் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆயுதபூஜையையொட்டி வருகிற 4 மற்றும் 5-ந் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | முறையாக பேருந்து இயக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்!

மேலும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் காலாண்டு விடுமுறை துவங்குகிறது. இதையடுத்து கோவையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்பதால், இன்று  கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்து  கட்டணம் 3 மடங்கு உயர்ந்து உள்ளது.

பல பேருந்துகளில்  பயணச்சீட்டு முன்பதிவு முடிவடைந்துள்ளது.அதே போன்று வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவையில் இருந்து சென்னை, மதுரை, தேனி, நெல்லை, நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | தேனி : சிறுமிகளின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...!

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கோவையில் இருந்து இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை சென்னை, நெல்லை, நாகர்கோவில், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும்  சென்னையில் இருந்து கோவைக்கு கூடுதலாக 6 பேருந்துகளும்  பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை முடிந்து கோவைக்கு திரும்பி வருவதற்கு வசதியாக 4-ந் தேதி நெல்லை, நாகர்கோவில், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் பேருந்துகள்  இயக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும் தான்! அதுக்காக இப்படியா? வைரல் வீடியோ!!!