முறையாக பேருந்து இயக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்!

முறையாக பேருந்து இயக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் கிராமத்திற்கு முறையாக பஸ் இயக்க கோரி மாணவ, மாணவியர்கள், பெற்றோர்களுடன் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் திருப்புவனம் - நரிக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது தவத்தாரேந்தல் கிராமம், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும் ஒரே ஒரு டவுன் பஸ் வந்து செல்கிறது. 

இந்த பஸ்சால் யாருக்குமே பயன் இல்லை. காலியாக வந்து காலியாகவே திரும்பி செல்கிறது. இந்த பஸ்சின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்று வரை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. தவத்தாரேந்தலில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் திருப்புவனம் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். நேரம் தவறி வந்து செல்லும் பஸ்சால் பயனில்லை எனவே உரிய நேரத்திற்கு பஸ்சை இயக்க வேண்டும் என கடந்த ஆறு மாத காலமாக போராடி வருகின்றனர். 

அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் இன்று காலை பெற்றோர்களுடன் 3 கி. மீ தூரம் நடந்து வந்து மேலராங்கியன் விலக்கு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்புவனம் - நரிக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நீடித்த சாலை மறியலை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஐந்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சாலை மறியலில் ரோட்டிலேயே நின்றனர். 

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கூலி வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். அருகில் இருந்து கிராம மக்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். பின் திருப்புவனம் கிளை பணி மனை மேலாளரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு குறைகளை சொன்ன போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கிராமமக்கள் மறியலை கைவிட்டனர்.