அக்டோபர் 7-ம் தேதி வரையாடுகள் தினம் கொண்டாடப்படும்..!

வருகின்ற ஏழாம் தேதி தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் தினம் கொண்டாடப்பட உள்ளதாக  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனவிலங்குகள் குறித்த புகைப்பட கண்காட்சி இன்று நடைபெற்றது. 

இந்த புகைப்பட கண்காட்சியை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் துவக்கி வைத்து புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதகையை அடுத்த சின்ன குன்னூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 புலி குட்டிகள் உயிரிழந்தது. இந்த புலி குட்டிகளின் 234 என்று அழைக்கக்கூடிய தாய் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ள புலிகள் 234 என்று அழைக்க கூடிய தாய் புலியா என்று தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் அந்த தாய் புலி வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து உள்ளதா, அல்லது வேறு புலியுடன் சண்டையிட்டு உயிரிழந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த தாய் புலியை தேடும் பணியின் போது புலியின் சில தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், அதனை ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இறந்த 4 புலி குட்டிகளின் மாதிரிகளுடன் ஒத்துப் போகிறதா என்கிற ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தாய் புலியை தேடும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் வருகிற அக்டோபர் 7ம் தேதி மாநிலத்தின் தேசிய விலங்கான வரையாடுகள் தினம் நீலகிரி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் மாவட்டத்தில் முக்குருத்தி வனப்பகுதியில் கணிசமான வரையாடுகளின் வாழ்விடமாக திகழ்வதாகவும், இந்த ஆண்டு முதன் முறையாக வரையாடுகள் தினம் கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.