பெண்களை மாடுகளாக சித்தரித்து வெளியான விளம்பரம்...சர்ச்சையில் சிக்கிய பிரபல நிறுவனம்...!

பெண்களை காட்சிப்பொருளாக்கிய விளம்பர வீடியோ...

பெண்களை மாடுகளாக சித்தரித்து வெளியான விளம்பரம்...சர்ச்சையில் சிக்கிய பிரபல நிறுவனம்...!

பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் ‘சியோல் மில்க்’  என்ற மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’சியோல் மில்க்’ நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில் பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில், ஒரு நபர் காட்டுப்பகுதிக்குள் கேமராவை எடுத்துக்கொண்டு செல்கிறார். 

அங்கு புல்வெளி நிறைந்த பகுதியில் சில பெண்கள் வெள்ளை நிற உடையணிந்து ஓடையில் ஓடும் நீரை குடிப்பது போன்றும், யோகா செய்வது போன்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்கிறார். அப்போது, ’இயற்கையை அதன் தூய்மையில் பாதுகாக்கும் ஒரு அழகிய இடத்தில் அவற்றை கேமராவில் படம்பிடிப்பதில் இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். இயற்கையில் இருந்து தூய்மையான நீரை அவர்கள் குடிக்கின்றனர். இயற்கையான உணவுகளையே உட்கொள்கின்றனர். அமைதியான சூழ்நிலையில் அமைதியாக வாழ்கின்றனர். நான் அவர்கள் அருகில் கவனமுடன் செல்ல முயற்சிக்கிறேன்’ என்கிறார். 

அப்போது, அவர் கிழே கிடக்கும் மரத்துண்டில் தனது காலை வைத்ததால் அது உடைந்து சத்தம் எழுப்புகிறது. அந்த சத்தத்தை கேட்ட அப்பெண்கள் திடீரென பசு மாடுகளாக மாறுகின்றனர்.

இதனைதொடர்ந்து ’தூய்மையான நீர், ஆரோக்கியமான உணவு, 100 சதவிகிதம் சியோல் பால். இயற்கையான சூழ்நிலையில் இருந்து இயற்கையான பால்’ என அந்த விளம்பரம் முடிவடைகிறது.

இப்படி பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து காட்சிப்பொருளாக்கி பால் விளம்பரம் செய்த ’சியோல் மில்க்’ நிறுவனம் மீது உலக அளவில் கண்டம் எழுந்தது. தொடர்ந்து அந்நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிப்பதாக எதிர்ப்புக்குரல்கள் எழுந்ததால், சியோல் பால் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களின் விற்பனை பெருமளவு சரிந்தது.

இதனைத்தொடர்ந்து, இந்த வீடியோ  உலகளவில் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து விளம்பரம் எடுத்ததற்க்கு சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மன்னிப்புக்கோரியது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.