புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...!

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து,  ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சேதங்களை ஆய்வு செய்தார். அவருடன், அமைச்சர்
தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இதையும் படிக்க : மழை நின்றும் தண்ணீர் வடியாததால், வடிகால்வாய்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகம் வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து, மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலமைச்சரிடம் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.