மழைநீருடன் தேங்கிய கழிவு நீர் - நோய் தொற்று பரவும் அபாயம்!

சென்னை ஐயப்பன்தாங்கல், பரணிபுதூர் பகுதியில் மழை நீர் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

மிக்ஜாம் புயல் பாதிப்பால்  சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கும் நிலையில், அதனை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆனால் பல பகுதிகளில் தற்போது வரையிலும் மழைநீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னை ஐயப்பன்தாங்கல், பரணிபுதூர், அம்பேத்கர் நகர், ஆலமரம் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  

பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் தண்ணீருடன் சேர்ந்து வீட்டிற்குள் வருவதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு அச்சத்துடன் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ள பொதுமக்கள், அதிகாரிகள் உடனடியாக நீரை அகற்றி, வரும் காலங்களில் நீர் தேங்காமல் இருக்க நிரந்த தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேபோல் பட்டாளம் பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நபரின் இறுதி சடங்கு ஜெனரேட்டர் வைத்து நடத்தப்பட்ட சம்பவம் தங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.