நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற...! செல்போன் டவரில் ஏறி போராட்டம்...!!

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற...! செல்போன் டவரில் ஏறி போராட்டம்...!!

தரங்கம்பாடி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். சமூக ஆர்வலரான இவர் இலுப்பூர் ஊராட்சியில் நீர்நிலைகள் மற்றும் அதன் வழிகளை மீட்கவும், நீராதார சங்கிலியை பாதுகாத்திட வேண்டியும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டார். 

அரசு அதிகாரிகள் போராட்டத்தின் போது பேச்சு வார்த்தை நடத்தினார்களே தவிர நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை என குற்றம் சாட்டி இன்று கதிரவன் சங்கரன்பந்தல் கடைவீதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நூதன முறையில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

தகவல் அறிந்த பொரையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதிர்வனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் அதற்கு கதிரவன் உடன் படாததால் போராட்டம் நீடித்தது. எனவே தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கதிரவனிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் .அதனை ஏற்று கதிரவன் தனது போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினார். 

கதிரவனின் இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.