செய்யாறு..! புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி...!! வாகன பேரணி...!!! 

செய்யாறு..! புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி...!! வாகன பேரணி...!!! 

செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய  மாவட்டம் அமைக்க கோரி 1000 க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று சார் ஆட்சியர் அனாமிகாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சார் ஆட்சியர் அலுவலகம் வரை செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க கோரி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கடந்த 1959 ஆண்டில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செய்யாறு ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. செய்யாறு கோட்டம் தவிர அனைத்து வருவாய் கோட்டங்களும் மாவட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் சுமார் 65 வருடங்களாக செய்யாறில் செயல்பட்டு வரும் வருவாய் கோட்டத்தில் சார் ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், பொதுசுகாதாரம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் சிப்காட் என 55க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் அனைத்தும் சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது.

செய்யாறு வருவாய் கோட்டம் தொடங்கி 65 ஆண்டுகள், வெம்பாக்கம் வட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் கடந்த  நிலையில் மாவட்ட தலைநகரான திருவண்ணாமலையிலிருந்து  வருவாய் கோட்டமான செய்யாறு பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி எதுவும் இன்று வரையில் ஏற்படுத்தப்படவில்லை. வெம்பாக்கம், அரியூர் போன்ற கிராமங்களில் இருந்து மாவட்ட தலைநகரான திருவண்ணாமலை சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் வந்தவாசி வட்டம் மாலையிட்டான் குப்பம் போன்ற கிராமங்களில் இருந்து மாவட்ட தலைநகரான திருவண்ணாமலை சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும், செய்யாறு வட்டம் வெங்கோடு ஆலத்தூர் போன்ற கிராமங்களில் மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமையப்பெற்றால் கிராம மக்கள் விவசாயிகள் மாணவர்கள் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனுக்குடன் அருகில் உள்ள செய்யாறு பகுதிக்கு எளிதாக வந்து செல்லவும் அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும். மேலும் வளர்ச்சி திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள் பேரிடர் காலத்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்திட அரசு அலுவலர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் சட்ட ஒழுங்கு ஏற்படும் அவசர காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக காவல்துறை எடுக்க உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார் எனவும் பொதுமக்கள் கூறினர். அவ்வாறு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட செய்யாறினை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி கவன ஈர்ப்பு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் தனிநபர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் சார் ஆட்சியர் அனாமிகாவிடம் செய்யாறு புதிய மாவட்டம் உருவாக்க சுமார் 2000 மனுக்கள் அரசியல் கட்சிகள்,தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோர் வழங்கினர்.