சென்னை; அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு!

சென்னை; அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு!

சென்னையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால்  300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் புகுந்தனர்.

சென்னை கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கோல்டன் 222 பிளாட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த 9 அடுக்குமாடி  குடியிருப்பில் மூன்று கட்டிடங்களில் மொத்தம் 180 வீடுகள் உள்ளன.
 
இந்நிலையில் நேற்று  நள்ளிரவு சுமார் 1.00 மணி அளவில்  அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்குவது போல் உணரப்பட்ட அந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக தங்களது குடும்பத்தினருடன் கட்டிடத்தை விட்டு வெளியேறி சாலைப்பகுதிக்கு வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ நிலநடுக்கவும் பதிவாகவில்லை என அந்த குடியிருப்பு வாசிகளிடம் தெரிவித்துள்ளனர்.  மேலும் கட்டிடத்தின் கட்டுமான குறைகளைப் பற்றி வீட்டு வசதி வாரியத் துறையினரிடம் முறையிட அறிவுறுத்திய  தீயணைப்பு துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு அடுக்குமாடி குடியிருப்பு வாசியான ஷர்மிளா, நேற்று நள்ளிரவு திடீரென கட்டிடங்கள் குலுங்கியதாகவும், மின்விசிறிகள் நாற்காலிகள் சில வினாடிகளுக்கு குலுங்கியதாகவும் கூறினார். மேலும்,  கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்பு வழங்கப்பட்டதாகவும்,  குடியிருப்பு வழங்கப்பட்டு இரண்டு மாதத்திற்குள்ளாகவே கட்டிடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் இது பற்றி உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டு கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசல்கள் சரி செய்யப்பட்ட நிலையில், அதில் தங்களுக்கு திருப்தி இல்லை என கூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும்,  அதன் பின்னர் அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விரிசல்கள் சரி செய்யப்பட்டதாக கூறினார்.

மேலும் பேசிய அவர் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் தாங்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருவதாகவும், குடியிருப்பு மற்றும் கட்டுமானம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் நீண்ட காலங்களாக இருப்பதாகவும் அதனை உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க