சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணம் அதிகரிப்பு... இதுவரை ரூ.30,500 கோடிக்கு மேல் இருக்கலாம் என தகவல்!

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணம் கடந்த 2021 ஆம் ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணம் அதிகரிப்பு... இதுவரை ரூ.30,500 கோடிக்கு மேல் இருக்கலாம் என தகவல்!

கடந்த 17-ஆம் நூற்றாண்டு முதலே சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் முதலீடு மற்றும் நிதி சார்ந்த விவரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக சர்வதேச நாடுகளை சார்ந்த பணம் படைத்த மக்கள் சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதிவைப்பு உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களால் டெபாசிட் செய்யப்பட்ட  நிதி சுமார் 30 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் இருக்கலாம் என சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கியின் வருடாந்திர தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதி முதலீடுகள் 20 ஆயிரத்து 700 கோடியாக இருந்ததாகவும், தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த நிதி 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மீட்டு கொண்டு வரப்படும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். இதையடுத்து பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சுவிஸ் நிதி நிறுவனங்களில் இந்தியர்கள் வைத்திருக்கும் கணக்குகளை வெளியிட சுவிஸ் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். 

இருந்த போதிலும் சுவிஸ் வங்கியில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்படும் பணம் ஆண்டுதோறும் புதிய உச்சத்தை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது.