கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்.. ! பாஜகவை விமர்சித்த கே.பி.முனுசாமி.?

கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்.. ! பாஜகவை விமர்சித்த கே.பி.முனுசாமி.?

கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை யாரும் விதைக்க வேண்டாம்.கொங்கு நாடு என்ற பிரிவினை வந்தால் தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய இணையமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவர் தனது விவர குறிப்பேட்டில் கொங்கு நாடு, தமிழ்நாடு என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் ஒன்றிய அரசு என்று அழைக்கும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே எல்.முருகன் இப்படி சொன்னார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இந்த விவகாரம் இப்போது தீவிரமாக சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்கள் கொங்கு நாடு என்று தொடர்ந்து பேசி வர திமுக கூட்டணி கட்சிகளோ அதை எதிர்த்து பேசி வருகின்றன. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலை என்ன? என்பது பற்றிய கேள்வி எழுந்தது.  

இந்நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பேரறிஞர் அண்ணா திராவிட நாடு திராவிடருக்கே என்ற கொள்கையுடன் செயல்பட்டார். பின்னர் தமிழகம் சிறந்து விளங்க அந்த சிந்தனையை ஒதுக்கி வைத்தார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை யாரும் விதைக்க வேண்டாம். கொங்கு நாடு என்ற பிரிவினை வந்தால் தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கப்படும்" எனத் தெரிவித்தார். 

பாஜக தலைவர்கள் கொங்கு நாடு என்று தொடர்ந்து பேசிவரும் நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் கருத்து பாஜகவை விமர்சித்தே என்றே பார்க்கப்படுகிறது.