அரசு விழாவில் நடந்தது என்ன? நவாஸ் கனி விளக்கம்!

அரசு விழாவில் நடந்தது என்ன? நவாஸ் கனி விளக்கம்!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இதனால் கோபமடைந்த நவாஸ் கனி இது குறித்து ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரனை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளரிடம் ஆட்சியர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதையும் படிக்க : "பொய்யை பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை" சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!

அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவாஸ் கனி, அரசு விழா மாலை 3 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு முன்கூட்டியே தொடங்கியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார். 

இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது ட்விட்டர் பக்கத்தில் திரைக்கு முன்னால் புன்னகை செய்வதும் திரைக்குப் பின்னால் அடிதடியில் ஈடுபடுவதும்தான் திமுக கூட்டணியின் உண்மை நிலவரம் என விமர்சித்துள்ளார். மேலும் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும்,  ஜனநாயகம் என்ற ஒன்று திமுக ஆட்சியில் உள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார். 

திமுகவில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், திமுக உறுப்பினர்கள் நேருக்கு நேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.