"பொய்யை பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை" சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!

"பொய்யை பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை" சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!
Published on
Updated on
1 min read

பொய்யை, பீதியை பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மாநில செயலாளர் சூர்யா மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை விமர்சிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டிருந்தது. இதனையடுத்து பாஜக மாநில செயலாளர் சூர்யா நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையொட்டி பாஜகவினர் இதனை கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என கண்டித்தனர். இந்நிலையில் இதனை மறுக்கும் விதமாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாஜகவினருக்கு டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதில், ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர் என குற்றம் சாட்டிய அவர்,  மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்கு பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி என எனக் கூறியுள்ளார்.

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன்பாட்டைக் கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய ஒன்றிய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைத் தளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது என சாடியுள்ளார்.

ஒரு நிதி அமைச்சருக்கு அப்படி ஒரு பெண்ணாடம் பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துக்கூற முடியாதா? எழுப்பியுள்ள அவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சர். அந்த இலாகாவை "பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப அமைச்சர்" என்று மாற்றி விடலாமா எனவும் சாடியுள்ளார். 

மேலும், உலகில் " இணையதள முடக்கம்" செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள் எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் இரத்த வெள்ளத்தில் மிதந்த போதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண் என தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com