தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு : தேவையின்றி சுற்றித் திரிபவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு : தேவையின்றி சுற்றித் திரிபவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி சென்னையில் நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஜி.பி.ரோடு, ஸ்டெர்லிங் சாலை, டி.எச்.சாலை, பெரியார் சாலை, ஜி.என்.செட்டி சாலை, உஸ்மான் சாலை என நகரின் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன. மேம்பாலங்களும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன. இதனால் இரவு 10 மணிக்கு பிறகு வாகனங்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. இதனிடையே, இரவு நேர ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த வாலிபர்கள் சிலர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இரவு பணிக்கு செல்வோர், தங்களது அடையாள அட்டையை காண்பித்து விட்டு சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மருந்தகங்களுக்கு செல்வோர் உள்பட அவசர தேவைகளுக்காக செல்வோரை விசாரித்த பின்னரே போலீசார் அனுமதித்தனர்.

இரவு நேர ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் நேற்று இரவு 9.30 மணிக்குள்ளாகவே மூடப்பட்டன. இதனால் இரவு நேரங்களில் திருவிழாக்கள் போல காட்சியளிக்கும் கடைவீதிகள், நேற்றிரவு வெறிச்சோடி காட்சி தந்தன. சாலைகளில் ஆங்காங்கே நடமாடும் டீக்கடைகளும் இரவில் காணவில்லை. இரவு ஊரடங்கையொட்டி நகரை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னையில் 312 இடங்களில் தடுப்புகள் அமைத்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதைப்போல இதர மாவட்டங்களிலும் போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ரோந்து வாகனம், தடுப்புகள் அமைத்தது என 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.