ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் தங்க நகைகள் கொள்ளை...!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் ஒரு நபர் மட்டுமே புகுந்து கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். 

கோவை நூறடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை, வழக்கம் போல் திறக்கப்பட்டது. அப்போது கடையில் வைத்திருந்த விலை உயர்ந்த சில நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிக்க : ED அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடய அறிவியல் துறை அதிகாரிகள், மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையன் நகை கடைக்குள் வந்த வழி கண்டறியப்பட்டது. பின்னர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த நபர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், இரவு ஒரு மணி அளவில் ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு வந்த ஒரு நபர், ஏசி தட்டு வழியாக உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தார். நகைக்கடையில் இருந்து 26 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் குற்றவாளியை பிடித்துவிடுவோம் என்றும் பாலகிருஷ்ணன் உறுதிப்பட தெரிவித்தார்.