நேற்று நடந்தது மீனவர்கள் மாநாடு கிடையாது...மீனவர்கள் போர்வையில் நடந்த திமுக பொதுக்கூட்டம்!

நேற்று நடந்தது மீனவர்கள் மாநாடு கிடையாது...மீனவர்கள் போர்வையில் நடந்த திமுக பொதுக்கூட்டம்!

கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகளை சென்னை ராயபுரம் புதிய மேம்பாலம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராயபுரத்தில் இருந்து செல்லும் 5 பேருந்துகள், 10க்கும் மேற்பட்ட கார்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் மதுரை புறப்பட்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதுரை மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் குடும்பத்தினரோடு வருகை தர உள்ளனர். எதிர்காலத்தில் இந்த மாநாட்டை எங்களின் மற்றொரு மாநாடு தான் முறியடிக்கும் என்று கூறினார்.

இதையும் படிக்க : 20 வயது இளைஞனிடம் துப்பாக்கி குண்டு...சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

மேலும், கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அப்பொழுது கருணாநிதி வாயை மூடிக்கொண்டு கச்சத்தீவை கொடுத்துவிட்டார். ஆனால் இப்பொழுது கச்சத்தீவு குறித்து ஸ்டாலின் பேசுகிறார். இது பற்றி பேச திமுகவுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? இது பற்றி பேச ஸ்டாலினுக்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? என கேள்விகளை எழுப்பி பேசினார். 

தொடர்ந்து பேசியவர், கடலில் எல்லை தெரியாததாலும், காற்றின் வேகம் ,மீன்பிடிக்கும் ஆர்வத்திலும் மீனவர்கள் எல்லை மீறுவது வழக்கம். தெரியாமல் தான் எல்லையை மீறுகிறார்கள். ஆனால், எல்லை மீறி மீன் பிடிப்பவர்களை, “ மீனவர்கல் பேராசை பிடித்தவர்கள் என சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறியிருந்தார்” இது அவருடைய குறிப்பிலேயே உள்ளாதாக கூறினார். 

கச்சத்தீவை பொறுத்தவரை எங்களின் (அதிமுக) நிலைப்பாடு மீட்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், திமுக ஆட்சி ஏற்ற இந்த இரண்டு வருடங்களில் கச்சத்தீவை மீட்போம் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்களா? என்று கேள்வியெழுப்பியவர், நேற்று நடந்தது மீனவர்கள் மாநாடு கிடையாது, மீனவர்கள் போர்வையில் நடந்த திமுக பொதுக்கூட்டம் மீனவர்கள் அதை புறக்கணித்துள்ளனர். கச்சத்தீவு விவகாரம், காவிரி விவகாரங்களில் திமுக வடித்தது வெறும் முதலை கண்ணீர் மட்டும் தான் என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.