பதவியேற்ற பின்னர் முதல்முறையாக சென்னை வந்த குடியரசு தலைவரை ஆளுநரும் முதல்வரும் வரவேற்றனர்.

பதவியேற்ற பின்னர் முதல்முறையாக சென்னை வந்த குடியரசு தலைவரை ஆளுநரும் முதல்வரும் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று சென்னை வருகை தந்தார். அவரை தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர். என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று மாலை கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, இந்திய விமானப் படையின் தனி விமானத்தின் மூலம் சென்னை  விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ள அவரை தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர். என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். உடன் அமைச்சர் பொன்முடி அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும்  சபாநாயகர் அப்பாவு,  மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகளும் வரவேற்றனர். 

நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ளவிருக்கிறார். அதன் பின்னர் மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில்  தர்பார் ஹால் என்று அழைக்கப்படும் அறையானது பாரதியார் அறை என பெயர் மாற்றப்பட்டுள்ள பெயர் பலகையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்து அளிக்க உள்ளதாகவும் அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் . அதன் பிறகு நாளை மறுநாள் புதுச்சேரி செல்லவிருக்கும் குடியரசு தலைவர் அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.  குடியரசு தலைவரின் தலைவரின் வருகையொட்டி   போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க   |  "என்.எல்.சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்கிறது தமிழக அரசு" அன்புமணி சாடல்!