சித்த மருத்துவ பல்கலைக் கழக சட்டம்: 2 முறை திருப்பி அனுப்பிய ஆளுநர், "ஆயுஷ் மருத்துவத்திற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவே" குற்றச்சாட்டும் வேண்டுகைக் குழு!

சித்த மருத்துவ பல்கலைக் கழக சட்டம்: 2 முறை திருப்பி அனுப்பிய ஆளுநர், "ஆயுஷ் மருத்துவத்திற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவே" குற்றச்சாட்டும் வேண்டுகைக் குழு!

ஆயுஷ் மருத்துவத்திற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக சித்த மருத்துவ பல்கலைக் கழக சட்ட மசோதாவை ஆளுநர் 2 முறை திருப்பி அனுப்பியதாக சித்த மருத்துவ பல்கலைக்கழக வேண்டுகைக் குழு  குற்றச்சாட்டடினை முன் வைத்துள்ளது.

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநரை கண்டித்தும், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தர வலியுறுத்தியும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், சித்த மருத்துவ பல்கலைக்கழக வேண்டுகைக் குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில் பேசிய சித்த மருத்துவ பல்கலைக்கழக வேண்டுகைக் குழுவைச் சேர்ந்த மைக்கேல் செயராசு, தமிழர்களின் 50 ஆண்டுகால கனவான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என விரும்பினோம். 1923 ஆம் ஆண்டு முதல்முறையாக பனகல் அரசர்தான் சித்த மருத்துவத்துறைக்கு முறையான அங்கீகாரம் அளித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 12 தனியார் மற்றும் 2 அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் என 14 சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சித்த மருத்துவ கல்லூரிகளை ஒருங்கிணைக்கவும் ஆய்வுகள் நடத்தவும் பல்கலைக்கழகம் தேவையாக உள்ளது. இங்கு கீழாநெல்லி குறித்து ஆய்வு நடத்தப்படடது. ஆனால், அது சித்த மருத்துவ பெயரில் நடைப்பெறவில்லை. அதனால் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைந்தால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உதவியாக இருக்கும். பல்கலைக்கழகம் அமைவது மாணவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2 முறை திருப்பி அனுப்பி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுநர் சித்த மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு உடனடியாக ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும். ஆளுநர் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைப்படி இல்லை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பி உள்ளார். சித்த மருத்துவம் தனியாக வளர்ந்துவிடக்கூடாது என்பதனால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. சித்த மருத்துவம் புறக்கணிக்கப்படுவது பொதுமக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஆளுநர் சட்டமுன்வரைவிற்கு அனுமதியளிக்கவில்லையென்றால் மாநில அளவில் அடுத்தக்கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

மேலும், ஆயுஸ் மருத்துவத்திற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவே சித்த மருத்துவம் புறக்கணிக்கப்படுகிறது. பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து மருத்துவமுறைக்கும் மருத்துவமனை உள்ளது. ஆனால் சித்த மருத்துவத்திற்கு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சித்த மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்கிற மத்திய அரசின் கொள்கை விளக்க குறிப்பை கூட செயல்படுத்தவில்லை எனத் தெரிவித்தார்.

சித்த மருத்துவர் சிவராமன் பேசுகையில், சித்த மருத்துவமுறையை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்ல சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இன்றியமையாதது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாவது உலக அளவில் பயனளிக்கும். கபசுர குடிநீர் கூட தொடர்ந்து எதிர்க்கப்பட்டது. ஆனால் கபசுர குடிநீர் குறித்து இதுவரை 30க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தாமதமாகும் அதேவேளையில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் மருத்துவ முறைகள் வேறு பெயரில் நடைபெறுகிறது. மருத்துவ குணமுள்ள செடிகளின் மூலக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் அதற்கு காப்புரிமை பெறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களில் சித்த மருத்துவத்தின் மூலக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு மாத்திரைகளாக கொண்டு வரப்படுகின்றன. சித்த மருத்துவம் குறித்து ஏராளமான போலி மருத்துவ முறைகள் பரப்பப்படுகின்றன. அவற்றை தடுக்க முறைப்படுத்த ஆய்வுகளின் அடிப்படையில் போலியானதை தவிர்க்க சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மிகப்பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்தார்.