நெஞ்சு வலியால் கெஞ்சிய சிறைக்கைதி...சிறைத்துறையினர் அலட்சியத்தால் கைதியின் உயிர் பறிபோனதா?

புழல் சிறையில் கைதி ஒருவர் இருதய நோயின் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என இறந்தவரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது யார்? கைதி உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு என்பதை விரிவாக பார்க்கலாம்...

சிறைச்சாலையில் கைதிகளை அடைத்து வைப்பது மட்டுமே சிறைத்துறையின் கடமை அல்ல.. ஒவ்வொரு கைதிகளின் உயிரையும் காப்பாற்றுவதும் தலையாய கடமை என்பதை மறந்துதான் போய் விட்டனரோ என தோன்ற வைத்துள்ளது சமீபத்திய சம்பவம். 

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
திடீரென இதயநோயால் பாதிக்கப்பட்ட ராஜேஷ், புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைக் கேள்விப்பட்ட அவரது மகன் ஜெப்ரி என்பவர் புழல் சிறை மருத்துவமனைக்கு சென்று தந்தையை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது மகனிடம் தனக்கு அடிக்கடி இருதய வலி வருவதாக கூறிய ராஜேஷ், மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பதாக கூறி வேதனைபட்டுள்ளார்.  

இதையடுத்து தனது தந்தைக்கு ஜாமின் கோரி மகன் ஜெப்ரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுமீதான விசாரணை அக்டோபர் 20-ம் தேதி காலை 11 மணியளவில் வர இருந்த நிலையில்,அதிகாலை 5 மணிக்கு மற்றொரு தகவல் வந்து ஜெப்ரியை அதிர்ச்சியடைய வைத்தது. 

போனில் பேசிய புழல் சிறை அதிகாரிகள், ராஜேசுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வருமாறும் கூறினர்.  தகவலைக் கேட்டு பதறியடித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது ராஜேஷ் அங்கில்லை என்ற செய்தி கிடைத்தது. 

தன் தந்தையின் இருப்பிடம் தெரியாமல் அங்குமிங்கும் அலைந்த ஜெப்ரிக்கு கடைசியாக, ராஜேஷ் உயிரிழந்து போனதாக மற்றொரு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷின் குடும்பத்தினர் புழல் சிறை நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இறந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர். அதற்கு சிறை நிர்வாகம் தரப்பில் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. 

2 நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலிக்கிறது என தந்தை அவ்வளவு சொல்லியும், சிறை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அலட்சியம் காத்ததாக குற்றம் சாட்டியுள்ளார் ஜெப்ரி.

சிறையில் உள்ள கைதிகளுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டால் அவர்களை சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டுமென்றால் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

ஒரு குற்றவாளிக்கு மரணம் தீர்வல்ல என மரணதண்டனையே நீக்கப்பட்ட நிலையில், சிறையில் உள்ள கைதிகள் திடீரென உயிரிழக்க காரணம் என்ன? சிறைத்துறை மற்றும் சிறை மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணமா? என்ற கேள்விகள் உருவெடுத்துள்ளது.