பணியில் உயிர் நீத்த காவலர்களுக்கு காவலர் வீரவணக்க நாள்...!

காவலர் வீரவணக்க நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பணியில் உயிர் நீத்த காவலர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 நாள் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அதன் படி, சென்னை டிஜிபி வளாகத்தில் உள்ள காவல் நினைவுச் சின்னத்தில் டிஜிபி ஷங்கர் ஜிவால் மற்றும் காவல் அதிகாரிகள் வீர மரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர். திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில் பணியின் போது தங்களது இன்னுயிர் நீத்த 188 போலீசாரின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து காவல்துறை பேண்டு வாத்தியங்கள் முழங்கிட, காவலர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

தருமபுரியில் இந்த ஆண்டு நாடு முழுவதும் காவல் துறையில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த 189 காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடியில் காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் விழாவில்,  54 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது

மயிலாடுதுறையில் 36 குண்டுகள் முழங்க காவலர்களின் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, டிஎஸ்பி சஞ்சீவ் குமார் மற்றும் போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

நீலகிரி மாவட்டம் உதகையில் காவலர் வீரவணக்கம் தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தலைமையில் உதகை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது

நாகை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,  மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.