பாம்புடன் ஆட்சியர் அலுவலகம் வந்த தாய் - மகள்...நெல்லையில் பரபரப்பு...!

பாம்புடன் ஆட்சியர் அலுவலகம் வந்த தாய் - மகள்...நெல்லையில் பரபரப்பு...!

பசுமை வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு பாம்புடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு தாய் - மகள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வன்னி கோணேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன் - சமரச செல்வி தம்பதி. இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், தாய் சமரச செல்வியும், அவரது மகளும் இணைந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். அப்போது, சுமார் 5 அடி நீளம் கொண்ட இறந்த பாம்பு ஒன்றை கையில் ஏந்தியபடி அலுவலகத்திற்கு வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க : வெறிச்சோடிய திருச்சி மாநாடு...ஓபிஎஸ்-க்கு திருப்புமுனையாக அமையுமா?

இதனை கவனித்த காவல்துறையினர் உடனே, விரைந்து சென்று பாம்பை அவர்களிடமிருந்து மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமரச செல்வி, தமிழக அரசின் பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இலவச வீட்டிற்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லை எனவும், கேட்டும் தரவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து, மின் இணைப்பு இல்லாததால் அவ்வப்போது பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்து விடுவதாகவும், இதனால் எங்களுடைய உயிருக்கே ஆபத்து உள்ளதாகவும், மின் இணைப்பு வழங்கப்படாததால் எனது மகளும் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், அந்தவகையில், நேற்று எங்களுடைய வீட்டில் புகுந்த பாம்பை அடித்துக் கொன்று தான், இன்று காலை நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்து இருப்பதாகவும் கூறினார்.