வெறிச்சோடிய திருச்சி மாநாடு...ஓபிஎஸ்-க்கு திருப்புமுனையாக அமையுமா?

வெறிச்சோடிய திருச்சி மாநாடு...ஓபிஎஸ்-க்கு திருப்புமுனையாக அமையுமா?
Published on
Updated on
1 min read

திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இன்று மாலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தொண்டர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வருகை தராததால் ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். 

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடும் சட்டப்போராட்டம் நீடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது.

அதை ஏற்க மறுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மட்டுமே கூடி அதிமுகவின் தலைமையை முடிவு செய்ய முடியாது, தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும் எனக்கூறி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டை நடத்துகிறார். இதில் சசிகலா மற்றும் டிடிவி. தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இருவரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். 

இந்நிலையில் திருச்சி சென்ற ஓ.பன்னீர் செல்வம், ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த முப்பெரும் விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததால் விழா நடைபெறும் இடம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

இதனிடையே ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியான போடி உட்பட தேனி, சின்னமனூர் ஒன்றியங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் உற்சாகத்தோடு ஓபிஎஸ் வாழ்க.. எடப்பாடி ஒழிக... என்று கோஷமிட்டபடி திருச்சி கிளம்பினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com