12 மணி நேர வேலை மசோதா...! தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சு வார்த்தை...!!

12 மணி நேர வேலை மசோதா...! தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சு வார்த்தை...!!

தனியாா் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தொடா்பாக, 14 தொழிற்சங்கங்களுக்கு அரசு சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா பேரவையில் கடந்த 21ம் தேதி கொண்டுவரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதாவின்படி, தொழிற்சாலைகள் சட்டத்தில் ஆறு முக்கியப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, வேலை நேரத்தை வாரத்துக்கு 48 மணி நேரம் என்பதை மாற்றியமைப்பது, தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகமாக்குவது போன்ற சட்டப் பிரிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு தொழிற்சங்கங்களும் தங்களது எதிா்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இந்த நிலையில், சட்டத் திருத்தம் குறித்து விளக்குவதற்காக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க 14 முக்கிய தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சிஐடியூ, ஏஐடியூசி உள்பட மத்திய தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளா் முன்னேற்றச் சங்கம், அண்ணா தொழிற்சங்கம் போன்ற தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இத்துடன் பிற சங்கங்களும் சுய விருப்பத்தின் அடிப்படையில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சங்கத்தின் சாா்பிலும் இரண்டு பிரதிநிதிகள் வரை பங்கேற்கவுள்ளனா். சட்டத் திருத்த மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்தும் எதற்காக திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன போன்றவை குறித்தும் அரசுத் தரப்பில் விளக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதில், அரசு சாா்பில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா. மோ.அன்பரசன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் முகமது நசிமுதின், தொழிலாளா் நலத் துறை ஆணையா் அதுல் ஆனந்த் ஆகியோா் பங்கேற்க உள்ளனர். 

இதையும் படிக்க:மசோதா நிறைவேற்றிய கையோடு ...! வெளிநாடு செல்லும் தொழில்துறை அமைச்சர்...!!