உழைப்பாளர் தினம் - தொழிற்சங்கங்கள் கொடியேற்றி கொண்டாட்டம்...!

உழைப்பாளர் தினம் - தொழிற்சங்கங்கள் கொடியேற்றி கொண்டாட்டம்...!

மே தினத்தை, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்க அமைப்பினர் உற்சாகமாக கொண்டாடினர். 

தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே 1-ம் தேதி, உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ’தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பாக, அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில், மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் மருத்துவ அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பில் மே தினம் கடைபிடிக்கப்பட்டது.  இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க : 12 மணி நேரம் வேலை: முதலமைச்சருக்கு நன்றி சொன்ன வைகோ...!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிஐடியு சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, தொழிலாளர் கொடி ஏற்றி, மே தின வாழ்த்துகளை தெரிவித்தார். 

அதேபோல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் கிரேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது. இதில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், சுமார்  60க்கும் மேற்பட்ட கிரேன் வாகனங்கள் பேரணியாக சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின.