”முதலமைச்சரின்‌ தனிப்பட்ட அதிகாரத்தில், ஆளுநரின் ஒப்புதலுக்கான‌ அவசியமே இல்லை” கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

”முதலமைச்சரின்‌ தனிப்பட்ட அதிகாரத்தில், ஆளுநரின் ஒப்புதலுக்கான‌ அவசியமே இல்லை” கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

அமைச்சர்களின் துறைகளை தீர்மானிப்பதும், மாற்றுவதும்‌ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின்‌ தனிப்பட்ட அதிகாரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கவனித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்புகளாக வழங்கி, அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பினார். 

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சரின் கடிதம் தவறாக வழிநடத்துவதாக இருப்பதாக கூறி அமைச்சரவை மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்காமல் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயல்பாட்டிற்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் கண்டனம் எழுந்து வருகிறது.

இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யக்கோரி...அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அந்த வகையில், அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர்களின் துறைகளை தீர்மானிப்பதும், மாற்றுவதும்‌ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின்‌ தனிப்பட்ட அதிகாரம் என்று கூறியவர், 
அமைச்சர்களின் துறை மாற்றம்‌ பற்றிய தகவலை ஆளுநருக்கு தெரிவிப்பது ஜனநாயக மரபின் வெளிப்பாடு என கூறியுள்ளார். 

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்கு உரியதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.