ஓபிஎஸ் தரப்பு நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? ஈபிஎஸ் தரப்பு கேள்வி...!

ஓபிஎஸ் தரப்பு நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? ஈபிஎஸ் தரப்பு கேள்வி...!

அதிமுக பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு என்னும் நிலையில், அடிப்படை உறுப்பினர்களை கேட்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு ஏன் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. 

இன்று மீண்டும் விசாரணை:

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.  இதற்கு ஓ.பி.எஸ். தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் மகேஸ்வரி, ரிஷிகேஷ்வராய் அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

ஈபிஎஸ் தரப்பு வாதம் :

1. பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்றதை அடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. அதில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்ட போது பின்பற்றப்பட்ட வழிமுறைகளே தற்போது கடைபிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அப்போது எதிர்ப்பு தெரிவிக்காத ஓ.பி.எஸ். தற்போது எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2. இரட்டை தலைமையில் ஒருமித்த முடிவெடுப்பதில் தடுமாற்றம் இருப்பதால், கட்சியை வழி நடத்த ஒற்றை தலைமை முடிவு எடுக்கப்பட்டதாக ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  பொதுக்குழுவில் 94. 5 சதவீத உறுப்பினர்களின் ஆதரவை அடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க: செவிலியர்களுக்கு 100% பணி பாதுகப்பு...ஒருசிலர் தவறாக வழி நடத்துவதாக அமைச்சர் குற்றச்சாட்டு!

3. பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு, அப்படி இருக்கும் போது ஓ.பி்எஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கேட்க வேண்டும் என ஏன் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. 

4. தொடர்ந்து, ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பதவிகள் நீக்கப்பட்டதால், 4 ஆண்டுகள் பொறுப்பு நீடிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.வில் இல்லாத ஒரு விஷயத்தை புதிதாக கொண்டு வரவில்லை. மாறாக இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை ரத்து செய்துவிட்டு முன்னர் இருந்தது போன்று பொதுச்செயலாளர் பதவிதான் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

5. மேலும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் 4 பங்கு உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரிலேயே பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதாகவும், கட்சியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கட்சியின் நலனுக்காகவே தவிர தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்காக அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.