அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு... அதிகாலை முதல் அதிரடி சோதனை!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு... அதிகாலை முதல் அதிரடி சோதனை!

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வருமான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருணை கிரானைட் நிறுவனம் உட்பட 16-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், சென்னையில் தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரியில் உள்ள எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் இல்லங்களிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. 

அதேபோல் காசா கிரான்ட்  மற்றும் அப்பாசாமி  கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணை ராணுவம், காவல்துறை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்த நிலையில் , தற்போது அமைச்சர் எ.வ.வேலுவுக்கு  சொந்தமான இடங்களில்  வருமான வரித்துறை சோதனை  நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது.