நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள்.... அப்புறப்படுத்தப்படுமா?!!

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள்.... அப்புறப்படுத்தப்படுமா?!!

சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக  பயன்பாடாத 3 பழைய  விமானங்களை அகற்ற இந்திய விமான நிலைய ஆணையம் பொது அறிவிப்பு. 

செயல்படாத விமானங்கள்:

சென்னை  விமான நிலையத்தில் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன் என்.இ.பி.சி., கிங்பிஷர், ஜெட் ஏா்வேஸ், டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய நிறுவன விமான சேவை இயங்கி வந்தன. தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில்லை. 

வைக்கப்பட்டவை வைக்கப்படாதவை:

இந்த செயல்பாட்டில் இல்லாத டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் எதுவும் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை.

ஆனால் என்.இ.பி.சி. ,கிங்பிஷா்,ஜெட் ஏா்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் 12 பயன்படுத்தப்படாத    விமானங்கள் சென்னை விமான நிலைய வடமேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக  நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. 

அப்புறப்படுத்தும் பணி:

இதில் என்.இ.பி.சி., விமானங்கள் 4, ஜெட் ஏர்வேஸ் விமானம் 1,ஆகிய 5 விமானங்கள் கடந்த 2021ம் ஆண்டு முறைப்படி தமிழ்நாடு அரசின் வருவாய்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு, அப்புறப்படுத்தும்  பணிகள் நடந்தன.  விமானங்களை உடைத்து அப்புறப்படுத்தும்போது,அதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படாத நிலையில் பணிகள் நடந்தன.

ஏற்றுமதி பாகங்கள்:

இந்த நிலையில் கிங்பிஷர் விமான  நிறுவனத்திற்கு சொந்தமான   விமானங்களை  அப்புறப்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன் நடந்தது.  அதில் பயன்படுத்தும் நிலையில் இருக்கும், இன்ஜின்கள்  உட்பட, தொழில்நுட்ப கருவிகள், முக்கியமான பாகங்கள் தனியே பிரித்து எடுத்து வைக்கப்பட்டு உள்ளன. அவைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

தனியார் விமானங்கள்:

தற்போது தனியார்களுக்கு சொந்தமான 3 பழைய  விமானங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.  அதற்கான ஆயத்தப் பணிகளை அந்தந்த தனியார் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

கூடுதல் வருவாய்:

இந்த உபயோகத்தில் இல்லாத பழைய  விமானங்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக 2012ம் ஆண்டு  முதல் விமான நிறுத்தக் கட்டணம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் இருந்து   வசூலிக்கப்படும். இதனால் சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.   சென்னை விமான நிலையதில் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை இந்த பழைய விமானங்கள பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கொண்டு உள்ளன.  இந்த விமானங்கள் அகற்றப்படுவதால் மற்ற விமானங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதிகள் கிடைக்கும்.  

விபத்து அபாயம்:

பழைய விமானங்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடா்ந்து நிறுத்தப்பட்டு இருப்பதால் பறவைகள் அந்த  கூடுகட்டி வசித்து இனவிருத்தி செய்து வந்தன.  இதனால் விமானங்கள் புறப்படும்போதும் தரையிறங்கும் போதும் பறவைகளால் விமான போக்குவரத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. இது சம்பந்தமாக தனியார் விமான நிறுவனங்களுக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் பல முறை அறிவுறுத்தியும்  செயல்பாட்டில் இல்லாத பழைய விமானங்களை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தன.

பொது அறிவிப்பு:

இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம்  செயல்பாட்டில் இல்லாத பழைய விமானங்களை அகற்றுவதற்கு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில், சென்னை விமான நிலைய இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் 3 பழைய விமானங்களையும், விமான நிறுவன நிர்வாகிகள் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

உறுதிமொழி:

இது சம்பந்தமாக அந்தந்த விமான நிறுவன நிர்வாகிகள் வருகின்ற 10 தேதி வெள்ளிக்கிழமை சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, இந்த விமானங்களை எத்தனை நாட்களில் அகற்ற இருக்கின்றனர் என்று உறுதி மொழியை அளிக்க வேண்டும்.  தவறும் பட்சத்தில் இந்திய விமான நிலைய ஆணையமே, நேரடியாக இந்த 3  பழைய விமானங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.  அதற்கான செலவு மற்றும் அபராத தொகைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வசூலிக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:   மேட்ரிமோனியல் கொள்ளையன்.... சிக்கியது எப்படி?!!