குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு...!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 16 ஆம் தேதி மேற்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக,  இன்றும், நாளையும் கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த மழை அடுத்த 2 நாட்களில் படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.