நைஜீரிய பயணியுடன் இருந்த 7 பேருக்கும் கொரோனா...  ஒமிக்ரான் பாதிப்பா என சோதனை...

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நைஜீரிய பயணியுடன் இருந்த 7 பேருக்கும் கொரோனா...  ஒமிக்ரான் பாதிப்பா என சோதனை...

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் குறித்த அச்சம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவானது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவர். இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நேற்று வெளியான ஜீன் ஆய்வு முடிவில் அவருக்கு ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார். அந்த நைஜீரிய பயணிக்கு 8 பேர் காண்டாக்ட்களாக இருந்தனர். இதில் ஒரு குழந்தை தவிர மற்ற 7 பேருக்கும் கொரோனா வந்துள்ளது.

இவர்கள் எல்லோரும் இரண்டு டோஸ் போட்டவர்கள். இவர்கள் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் கொரோனா சோதனை முடிவில் எஸ் ஜீன் இல்லை என்று முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக ஓமிக்ரான் கொரோனா உள்ளிட்ட சில வகை கொரோனாவில் எஸ் ஜீன் இருக்காது.

எஸ் ஜீன் இல்லாமல் இருந்தால் அது பெரும்பாலும் ஓமிக்ரானாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இவர்களுக்கு ஓமிக்ரான் இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஜீன் சோதனை செய்யப்பட்ட பின்பே இவர்கள் 7 பேருக்கும் ஓமிக்ரான் உள்ளதா என்று உறுதியாக தெரியும்.  

மக்கள் அச்சம் அடைய கூடாது. ஒமிக்ரானுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பூசியை அனைவரும் தவறாமல் செலுத்திக்கொள்ளவும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.