புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக...தலைமுடியை தானமாக கொடுத்த கல்லூரி மாணவிகள்!

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக...தலைமுடியை தானமாக கொடுத்த கல்லூரி மாணவிகள்!

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் விதமாக ராணி மேரி கல்லூரி மாணவிகள் தலை முடிகளை தானமாக கொடுத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் பல தரப்பட்ட சமூக பொறுப்புள்ள முன்னெடுப்புகள் தொடர்ச்சியாக நடைபெறுவது வழக்கம். அதில் ஒரு பகுதியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலை முடியை இழந்து வருந்துபவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் விதமாக செயற்கை தலை முடியை வழங்குவதற்காக தலை முடிகளை தானம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் விதமாக ராணி மேரி கல்லூரி மாணவிகள் தங்கள் தலை முடிகளை தானமாக கொடுத்தனர்.

ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்று  காலத்திற்கு முன்பு ஒரு முறை இது போன்று புற்றுநோய் பாதித்தவர்களுக்கு தலை முடி தானம் வழங்கும் நிகழ்வை நடத்தியதாகவும், அப்போது, சில மாணவிகள் தங்கள் முழு தலை முடியையும் மொட்டை அடித்து கொண்டு அந்த முடியை தானம் செய்தனர் என்றும், கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்...தமிழக அரசின் முன்னெடுப்பை வரவேற்பதாக விர்சா பெர்கின்ஸ் பேச்சு!

அதேபோன்று, இந்த ஆண்டு 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் தலை முடியில் இருந்து குறைந்த பட்சம் 4 சென்டி மீட்டர் அளவு முடியை தானமாக புற்றுநோய் பாதித்தவர்களுக்கு வழங்கினர். மேலும், 10 க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்களும், மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் தாமாக முன்வந்து தலைமுடியை தானம் அளித்தனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாகவும், கதிரியக்க சிகிச்சையினாலும் அவர்களது தலைமுடியை இழக்க நேரிடுகிறது. இதனால் அவர்களுக்கு செயற்கை தலைமுடி வழங்கும் விதமாக தற்போது நாங்கள் தலைமுடியை தானமாக வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தனர்.