கொரோனா காலத்திற்கு பின் அதிகரிக்கும் மாரடைப்பு உயிரிழப்புகள்... மன்சுக் மாண்டவியாவின் அறிவுரைகள்!

நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 

பொதுவாக மாரடைப்பு ஏற்படுவது என்பது வயதானவர்கள், ஏற்கனவே இணைநோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால் கொரோனா காலத்திற்கு பிறகு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியிலும் மாரடைப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போதும், விளையாட்டு போட்டிகளின் போதும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழக்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'கர்பா' நடனம் ஆடியபோது ஒரு பெண் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் உட்பட 6 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த 6 பேரை தவிர  அதே காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் மேலும் 22 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்த நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரடதுறை அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். நேற்றைய தினம் குஜராத்தில் உள்ள தனது சொந்த மாவட்டமான பாவ்நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொண்டதாகவும், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடினமாக வேலை செய்வது, வேகமாக ஓடுவது, கடுமையாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, ஓய்வெடுக்காமல் வேலைசெய்வது  போன்றவற்றில் இருந்து  விலகி இருப்பதால் மாராடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என இந்திய மருத்துவ கவுன்சிலான ஐசிஎம்ஆர் நடத்திய விரிவான ஆய்வின் அடிப்படையில்  இந்த தகவல்களை பரிந்துரைத்திருப்பதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.