அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை - சென்னை உரிமையியல் நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை - சென்னை உரிமையியல் நீதிமன்றம்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இல்லாததால், கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், தான் ஒரு அதிமுக நிர்வாகி என்ற முறையில் மனு தாக்கல் செய்வதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சூரியமூர்த்தி அதிமுக நிர்வாகி அல்ல என்றும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கூடாது என்றும், ஒ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தரப்பிலான மனு மீது, 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். வரும் 2ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் முன்கூட்டியே விசாரணை கோரிய சூரியமூர்த்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற எந்த தடையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.