சுகாதாரத்துறை சார்பில் 14 கோரிக்கைகள்...மத்திய அமைச்சரை சந்தித்த மா.சுப்பிரமணியன்!

சுகாதாரத்துறை சார்பில் 14 கோரிக்கைகள்...மத்திய அமைச்சரை சந்தித்த மா.சுப்பிரமணியன்!

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து சுகாதாரத் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். 

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் பின்னர் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடியுடன் இணைந்து மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். 

அப்போது சுகாதாரத் துறை தொடர்பான 14 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை  அளித்தார். அதில் நீட் எதிர்ப்பு தெரிவித்தல், கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குதல், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : நாங்க படுத்தா பந்த்...சாலையில் மட்டையான மதுபிரியர்!

இது தவிர,  தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் நிறுவுதல், மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபணை, சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்டதாரி படிப்புகளுக்கான உத்தேச பொது கலந்தாய்வுக்கு ஆட்சேபணை, தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் அதிகரிப்பு  வரைவுக்கு ஆட்சேபணை, காலியாக உள்ள அனைத்து மத்திய எம்.பி.பி.எஸ் இடங்களை மாநிலத்திற்கு ஒப்படைக்கவும், 50 புதிய கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவுதல், 50 புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவுதல் ஆகிய கோரிக்கைகளை விடுத்தார்.

மேலும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துதல், ஆயிரம் புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் நிறுவுதல், ஆயிரம் புதிய கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் நிறுவுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதேசமயம், சென்னை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட  மருத்துவ சேவைக் கட்டிடம் நிறுவுவதற்கும் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.