உலகக்கோப்பை தொடரில் 5-வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி....!

உலகக்கோப்பை கிாிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவுசெய்தது.

13-வது உலகக்கோப்பை கிாிக்கெட் தொடாின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தோ்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி 8 புள்ளி 1 ஓவா்களில் 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினாா். 

இதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 புள்ளி 4 ஓவா்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னா் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 

விராட் கோலி - ஜடேஜா இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனா். ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் 95 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், உலகக்கோப்பை தொடரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இதற்கிடையே இந்திய அணிக்கு பிரதமா் மோடி தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தொிவித்துள்ளாா். களத்தில் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்ததாக பாராட்டியுள்ளாா். 

இதையும் படிக்க   |  "முட்டை மார்க் வாங்கினால் எல்கேஜி-யில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்" தமிழிசை!