பேட்டிங்கை பாதிலேயே விட்டுவிட்டு வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின்...! ஏன் தெரியுமா..?

நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டக்காரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘ரிட்டையர்டு அவுட்’ முறையில் வெளியேறியது ஐ.பி.எல் வரலாற்றிலே முதன் முறையாக அரங்கேறியுள்ளது. 

பேட்டிங்கை பாதிலேயே விட்டுவிட்டு வெளியேறிய  ரவிச்சந்திரன் அஸ்வின்...! ஏன் தெரியுமா..?

15வது ஐ.பி.எல் தொடர் மகாராஷ்டிர மாநிலத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 20 வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது. 

இதனிடையே நேற்றைய ஆட்டத்தின்போது 6-வது வீரராக களமிறங்கிய அஸ்வின் தனது சிறப்பான ஆட்டத்தால் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திடீரென்று “ரிட்டையர்டு அவுட்” முறையில் பாதிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். அதற்கு காரணம் அவருடன் நடுவில் களமிறங்கி அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஷிம்ரோன் ஹெட்மயர் உடன் இணைந்து இளம் வீரரான ரியான் பராக் பேட் செய்தால் ஏதுவாக இருக்கும் என்பதற்காக அவர் அவ்வாறு வெளியேறியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் ரபேல் பிஷப் அஸ்வினின் இந்த செயலை, “இது ஒரு கவர்ச்சிகரமான டி20 உத்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து போட்டியின் முடிவில் பேசிய ஹெட்மயர், “அஸ்வின் வெளியேறுவது பற்றி அப்போது எனக்கு தெரியாது. மேலும், அவர் சிறிது களைப்பாக காணப்பட்டார். இது ஒரு நல்ல முடிவு. அவருக்கு பின் வந்த ரியான் பராக் சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்” என்று அஸ்வினை பாராட்டினார்.

அதுமட்டுமின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநரும் முன்னாள் வீரருமான குமார் சங்கக்காரா அஸ்வினை பாராட்டி பேசியபோது, “அஸ்வின் ‘ரிட்டையர்டு அவுட்’ ஆக அதுவே சரியான தருணம். அஸ்வின் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போதே இதுகுறித்து கேட்டார். நாங்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அப்போது ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது பேட்டிங்கில் அணி தடுமாறிக் கொண்டிருந்த இக்கட்டான தருணத்தில் களமிறங்கி, அஸ்வின் எவ்வளவு சிறப்பாக  பேட்டிங் செய்து அணிக்கு ஆதரவளித்தார். 

அதன்பின், ‘ரிட்டையர்டு அவுட்’  முறையில் வெளியேறி தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார். தொடர்ந்து அற்புதமாக பந்துவீசி  சிறப்பாக செயல்பட்டார்” என்று பாராட்டினார்.