வெண்கலப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு தலைவர்கள் வாழ்த்து...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

வெண்கலப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு தலைவர்கள் வாழ்த்து...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிவி சிந்து அர்ப்பணிப்பு, நிலைத்தன்மை, தலைசிறந்த ஆட்டம் ஆகியவற்றிற்கு புதிய அளவுகோலாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு தனது இதயப் பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

இதேபோல் ஒலிம்பிக்கில் பிவி சிந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக சிந்து திகழ்வதாகவும் அவர்  இந்தியாவின் பெருமை என்றும் மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார்.மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிவி சிந்துவை வாழ்த்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்தியுள்ளார். தலைசிறந்த ஆட்டத்தை சிந்து வெளிப்படுத்தியுள்ளதாகவும் 

அதேபோல் புதிய வரலாறு படைத்துள்ளதாகவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேலும் சிந்துவை எண்ணி நாடே பெருமை கொள்வதாகவும் அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் சிந்துவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

இதனிடையே தனது மகள் பதக்கம் பெறுவதற்காக கடும்வலியை அனுபவித்த பயிற்சியாளர் பார்க்கிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக சிந்துவின் தந்தை பிவி ரமணா கூறியுள்ளார். கடந்த போட்டியில் தோல்வியடைந்த அவருக்கு தான் ஊக்கமளித்தாகவும், தனக்கு பரிசாக ஒரு பதக்கத்தை மட்டும் பெற்றுவரும் படி கூறியதாகவும் தெரிவித்தார். ஒட்டுமொத்த தேசத்தின் பிரார்த்தனையால் தனது மகள் பதக்கம் வென்றுள்ளதாகவும் பி.வி.ரமணா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.