இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி, 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர். குறிப்பாக ஷர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசி,  61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7  விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கே.எல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு  85 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவை விட இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 35 ரன்களுடன், ரகானே 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.