அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது...

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது...

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரில் மகுடம் யாருக்கு? என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வீரர்கள், கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் சிக்காமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 32 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த ராபின் உத்தப்பா 3 சிக்சர்களை விளாசி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டு பிளசிஸ், 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மொயீன் அலி 37 ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்தது.


193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் 51 ரன்களும்,  வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் குவித்து, அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு பிறகு வந்த யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. நிதிஷ் ரானா டக் அவுட் ஆக, சுனில் நரேன் 2 ரன்களில் நடையை கட்ட, இயன் மார்கன் 4 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 9 ரன்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாக மாறியது. கடைசியில் ஷிவம் மாவி, லோக்கி பெர்குசன் ஆகிய 2 பவுலர்கள், பவுண்டரி மற்றும் சிக்சர்களை பறக்க விட்டும் பலனில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்  27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மோசமான ஆட்டம் காரணமாக விமர்சிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தாண்டு சாம்பியன் கோப்பையை வென்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த ஐ.பி.எல். சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையும், 2-வது இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு 12 கோடியே 50 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. அத்துடன் ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன் ருதுராக் கெயிக்வாட்டுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது. மேலும், சென்னை அணி பேட்ஸ்மேன் டு பிளெசிசுக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.