ரூ.50,700 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஐம்பதாயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர்  நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், நிறைவுற்ற திட்டங்களை அர்ப்பணிக்கவும் போபால் வந்தடைந்த பிரதமர் மோடியை, அம்மாநில முதலமைச்சர்  சிவராஜ் சிங் சௌகான், ஆளுநர் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து பினா சென்ற பிரதமரை, பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து 50 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, பினா சுத்திகரிப்பு மையத்தில் பெட்ரோ கெமிக்கல் வளாகம் அமைக்கப்படுகிறது.

இதேபோல், நர்மதாபுரம் மாவட்டத்தில் மின் உற்பத்தி மண்டலம், இந்தூரில் இரண்டு தகவல் தொழில்நுட்பப் பூங்கா, ராட்லமில் மெகா தொழிற்பூங்கா மற்றும்  ஆறு   தொழில்துறை சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.